1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2025 (19:00 IST)

இறைச்சி உணவு: உடலுக்கு நல்லதுதான், ஆனால் அளவோடு! சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன?

Goat Meat
இறைச்சி உணவு உடலுக்கு நல்லதா, இல்லையா என பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தன. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளன: மனித உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் இறைச்சியில் நிறைந்துள்ளதால், அதை தவிர்க்காமல் அளவோடு உட்கொள்வது சிறந்தது என இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, சிவப்பு இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் பல தாதுக்கள் செழுமையான அளவில் உள்ளன. இறைச்சியில் காணப்படும் ஹீம் அயன் (Heme Iron) எனப்படும் இரும்புச்சத்து, நம் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லவும், ஹார்மோன் உற்பத்திக்கும் மிக அவசியம். இந்த ஹீம் இரும்பு உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ரத்தசோகை நோய் பெரும்பாலும் இந்த இரும்புச்சத்து குறைபாட்டால்தான் வருகிறது. குறிப்பாகப் பெண்கள் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரத்தசோகையைத் தடுக்க, ஈரல் இறைச்சி மிகச் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
 
சிவப்பு இறைச்சியில் உள்ள வைட்டமின் பி12, ரத்தம் மற்றும் டி.என்.ஏ. உருவாக முக்கியச் சத்தாக இருக்கிறது. மேலும், இது உடலின் பல்வேறு ஹார்மோன்கள், நொதிகள் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.
 
சில விலங்குகளின் சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது உடலில் "கெட்ட கொழுப்பை" அதிகரிக்கும். இதை தவிர்க்க, சிவப்பு இறைச்சியை சிறிய அளவில், வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே உண்ணலாம். ஏற்கனவே இதய நோய் அல்லது அதிக கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் இறைச்சி சாப்பிட விரும்பினால், மிக குறைவாக உண்ண வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆக, இறைச்சி நல்லதுதான், ஆனால் அளவு முக்கியம்!
 
Edited by Mahendran