திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முழு செடியும் மருத்துவ பயன்கள் நிறைந்த ஊமத்தை !!

ஊமத்தை பொதுவாக நோய் தணிப்பானாகவும், குறிப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கும் மயக்க மருந்தாகவும்  பயன்படுகிறது.

இலையை நல்லெண்ணெய்யில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிக்கட்டுதல் ஆகியவை குணமடையும்.
 
இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில் கட்ட ஆறும். மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை, மாலை 3 நாள் மட்டும்  கொடுக்க நஞ்சு தீரும். கடும் பத்தியம் - பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.
 
இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்துக் காய்ச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச் சீதளத்தால் வந்த காது வலிதீரும்.
 
இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம், சதைவளரும் புண்புரைகள் தீரும்.
 
இலை, பூ, விதை மூன்றையும் பாலில் அவித்து உலர்த்தி, தூள் செய்து பீடியாய் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உடனே குறையும். ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும், புழு இறந்து முடி வளரும்.
 
ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். மறுநாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரம்மை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.
 
ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விஷத்தன்மையுடையது. இதன் விஷம் முறிய தாமரைக் கிழங்கை அரைத்துப் பாலில் இரு வேளை மூன்று நாள்  கொடுக்கலாம்.