உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் !!
உலர்ந்த அத்திப்பழத்தை தண்ணீரில் அல்லது தேனில் ஊறவைத்து, அதன்பிறகு சாப்பிடுவதே அத்திப்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த ஒரு முறையாகும்.
உலர்ந்த அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் உங்களது எலும்புகளை வலுப்படுத்தி அவற்றை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துக்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தம் உடையவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவக் கூடியதாகும்.
அத்திப்பழத்தில் உள்ள பினொல்ஸ் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுத்திட பயன்படுகிறது. எனவே புற்று நோய் நம்மை நெருங்காமல் காத்துக்கொள்ள அத்திபழம் சாப்பிடுவது உதவக்கூடிய ஒன்றாகும்.
அத்திப் பழத்தில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்திடவும், முகத்தை பொலிவோடு வைத்திருக்கவும் அத்திப்பழம் பயன்படுகிறது. இது மட்டுமின்றி முகம் சார்ந்த பல பிரச்சனைகளையும் சரி படுத்தும் ஆற்றல் அத்திப் பழத்திற்கு உள்ளது. 3 சிறிய அத்திப் பழங்களையும், 2 டீ ஸ்பூன் தேனையும் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் 20 நிமிடங்கள் முகத்தில் தடவி ஊற வைத்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.
ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப் பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அத்திபழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது மேலும் ரத்த சோகை வராமல் காத்துக் கொள்ளவும் அத்திப் பழத்தை சாப்பிடுவது உதவும்.
ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்பை சரி செய்து இதயத்திற்கு ரத்தத்தை சீராக எடுத்துச்செல்ல அத்திப்பழம் மிகவும் உதவுகிறது. அத்திப்பழத்தை சாப்பிட்டால் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.