வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் கொள்ளு...!!

கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்று கூறுவார்கள். அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான  பங்குண்டு.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி  பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
 
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி  செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
 
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு  உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.
 
மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேகவைத்து மசித்து, சருமப்  பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.
 
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க  கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேகவைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும்  சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும்.