வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட பிரண்டை...!!

பிரண்டையின் இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. 
இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.
 
இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும்.
மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு  வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.
 
இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த  ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.