வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!
தோல் வறட்சி என்பது சருமம் கரடுமுரடாக உலர்ந்து செதில்களாக காணப்படும் நிலையாகும். இது வயது, பராமரிப்பு முறைகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இந்த நிலை பெண்கள், ஆண்கள் அனைவரையும் பாதிக்கக் கூடியது. தோல் வறட்சி "ஜெரோடெர்மா" என்ற மருத்துவ பெயராலும் அழைக்கப்படுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள். இது உடலில் செல்களின் அழிவை தடுக்கும். வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் துத்தநாகம், செலினியம் போன்ற தாதுக்கள் தோலுக்கு புத்துணர்ச்சி தருகின்றன. பாதாம், வால்நட், பூசணி விதை, கோழி இறைச்சி, கேரட், மாம்பழம், பசலைக் கீரை போன்ற உணவுகள் சருமத்திற்கு நல்லவை.
தோல் பராமரிப்பில், சரியான உணவுடன் தினமும் குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதும், தூக்கம் போதுமான அளவு பெறுவதும் அவசியம். உடல் ஆரோக்கியத்தை பேண, வாரத்தில் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்வது நல்லது. மேலும், பாசிப்பயறு, வெட்டிவேர், சந்தனம் ஆகியவற்றின் கலவையான நலுங்குமா பொடி குளிக்கப் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகும்.
தோல் வறட்சியை குறைக்க, அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து தடவுவது, ஆவாரம் பூ பொடியை பயன்படுத்துவது, தேங்காய்ப் பாலை குங்குமபூவுடன் காய்ச்சி தேய்ப்பது போன்ற முறைகள் பயனளிக்கும். சரியான பராமரிப்பு வழிகளில் நீடித்து செயல்பட்டால், தோல் பிரச்சனைகள் குறைந்து, ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும்.
Edited by Mahendran