எந்த காய்கறிகளில் என்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா....?
பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தலாம். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.
நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும்.
வாழைத்தண்டு பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.