வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்....!!

ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் உண்டாகின்றன.

புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில்  தெரியவந்திருக்கிறது.
 
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது. புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும்.
 
புதினா எண்ணெய் 2 மிலி அளவு 1 அல்லது 1 ½ டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்று வலி அஜீரணம் குணமாகும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி  வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். 
 
புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். 
 
புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. 
 
புதினா தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.
 
புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தலைவலி குணமாக புதினா எண்ணெய் வலியுள்ள பகுதியில் மேல் பூச்சாக பூச வேண்டும். இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு உறங்க மிகுந்த பலன் தரும்.
 
புதினா இலையை நிழலில் காயவைத்து, ஒரு பிடி அளவு 1 அல்லது 1 ½ லிட்டர் நீரில் காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 50 மிலி வரை குடிக்க காய்ச்சல் குணமாகும்.
 
கோடை காலங்களில் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு உடல் அதிக உஷ்ணமடைந்து கோடைக்கால ஜுரம், உஷ்ணக் கட்டிகள் ஏற்படுவது மற்றும் இன்னபிற உடல்  உபாதைகள் உண்டாகி துன்புறுத்துகின்றன. இத்தகைய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு கோடைக்காலங்களில் புதினா இலைகளை தினமும் பக்குவம் செய்து  சாப்பிடுவதும், பானங்களில் சிறிது புதினா இலைச்சாறு கலந்து அருந்துவதாலும் உஷ்ண பாதிப்புகள் குறைகிறது.