வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!
தனிநபர்கள் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களை அடிப்படையாக கொண்டு, ரூ.200 கோடி வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சட்டம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான கணக்கில் இடம்பெறாத பெரும் தொகை பணம் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூலம் புலப்பட்டது என்று குறிப்பிட்டார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் கூகுள் மேப் பயன்பாட்டின் அடிப்படையில் பணம் மறைத்து வைக்கப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டதாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பினாமி சொத்துகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
வருமான வரித் துறை தங்கள் அதிகாரங்களை மேம்படுத்துவதன் மூலம், பெரிய அளவிலான வரி மோசடிகளையும் நிதி முறைகேடுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும் என்றார்.
புதிய வருமான வரிச் சட்டம் செயல்படுத்தப்பட்டால், மின்னஞ்சல், வாட்ஸ்அப், டெலிகிராம், வணிக மென்பொருள்கள் மற்றும் சர்வர்களின் தகவல்களைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட பணச் சுழற்சிகளை வெளிக்கொணரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சு மத்திய அரசு தனிநபர்களின் வாட்ஸ்அப் உரையாடல்களை தன்னிச்சையாக கண்காணிக்கிறதா? என்பது சமூகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Edited by Siva