வானத்தில் பறந்து வரும் சாப்பாடு – ஸொமாட்டோ அடுத்த திட்டம்
நாளுக்கு நாள் மாநகரங்களில் உணவின் தேவையும், அதை சப்ளை செய்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிடித்த உணவுகளை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்ய ஸொமாட்டோ, ஊபர், ஸ்விகி போன்ற மொபைல் செயலிகள் வந்துவிட்டன. அதனால் அலுவலகங்களில் பணிபுரிவோர், வீட்டில் இருப்போர் என பலரும் இது போன்ற செயலிகளில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பெருநகரங்களில் ஒருவர் சாப்பாடு ஆர்டர் செய்தால், ட்ராபிக் பிரச்சினைகளால் அதை கொண்டு வந்து கொடுக்க டெலிவரி செய்பவருக்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை தேவைப்படுகிறது. இந்த பிரச்சினையை போக்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை பிடித்திருக்கிறது ஸொமாட்டோ நிறுவனம்.
பறக்கும் ட்ரோன்கள் மூலம் ஆர்டர் செய்பவருக்கு உணவுகளை வழங்க முடிவெடுத்திருக்கிறது ஸொமாட்டோ நிறுவனம். இதன்மூலமாக ட்ராபிக் பிரச்சினைகளை ஈஸியாக தாண்டிவிடலாம் என்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். ஒரு டெலிவரி பாய் 30 நிமிடங்கள் பயணித்து எடுத்து செல்லும் உணவை ட்ரோன்கள் மூலம் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் கொண்டு சென்று விடலாம்.
ஆனால் இதில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. ட்ரோன்கள் வானத்தில் பறப்பதற்கு முறைப்படி அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும். ட்ரோன் பறப்பதற்கென சில விதிமுறைகளும் இருக்கின்றன. மேலும் ஒரு உணவு பொட்டலத்தை தாங்கி செல்லும் ஆற்றல் மிக்கதாய் அந்த ட்ரோன்கள் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மட்டுமே ட்ரோனை ரிமோட்டால் இயக்க முடியும். ரொம்ப தொலைவில் கஸ்டமர் இருந்தால் இது சாத்தியப்படாது.
முதல்கட்ட சோதனையாக மும்பையில் ஒரு கஸ்டமருக்கு ட்ரோன் மூலம் வெற்றிகரமாக உணவினை டெலிவரி செய்துள்ளது ஸொமாட்டோ நிறுவனம். மேலும் ட்ரோன்களை இயக்குவதில் சட்ட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உள்ளது ஸொமாட்டோ நிறுவனம். இதற்காக லக்னோவை சேர்ந்த டெக் ஈகில் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது. உணவு டெலிவரிக்கென்றே பிரத்யேகமான வசதிகள் கொண்ட ஒரு ட்ரோனை அவர்கள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிறைய உணவு ஆர்டர் செய்யும் செயலிகள் வந்துவிட்டதால் அதிலிருந்து தன்னை அப்டேட் செய்துகொள்ள ஸொமாட்டோ இந்த புதிய திட்டத்தை தொடங்கியுள்ளதாக பேசப்படுகிறது.