திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:02 IST)

பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்க ரூ.75 லட்சம் ஆச்சாம்..!!

கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்க கேரள அரசு 75 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கொடிகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி பாபுவை மீட்க முயன்றனர். 
 
மலையின் மேல் பகுதிக்குச் சென்று கயிறு மூலம் அவரை மீட்கவும் முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தென்படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போதுதான், பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது அவர்களுக்கு தெரியவந்தது.
 
இதையடுத்து, மலையிலிருந்து கீழிறங்கிய பாபுவின் நண்பர்கள், அப்பகுதி மக்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். நள்ளிரவில் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் மலம்புழா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், அவர்களால் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
 
இருப்பினும், பாபுவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கேயே தங்கியிருந்த அக்குழுவினர், இரவு நேரத்தில் வன விலங்குகள் வராமல் இருக்க, தீப்பந்தங்களையும் ஏற்றினர் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 
 
பின்னர் அங்கு இரண்டு குழுக்களாக அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர், அவரை மீட்கும் பணியில் நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 40 மணி நேரத்திற்கும் மேலாக மலை பிளவில் சிக்கிய இளைஞர் பாபுவை ராணுவத்தினர்  மீட்டுள்ளனர். தன்னை மீட்டவர்களுக்கு முத்தம் கொடுத்து நன்றி கூறினார் பாபு. மேலும் கேரள அரசு சார்பில், முதல்வர் பினராயி விஜயனும் இந்திய ராணுவத்துக்கு நன்றி கூறினார். 
 
இதனிடயே இந்த மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு வாடகை மட்டுமே 50 லட்சம் ரூபாய் செலவாயிருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர பணிக்குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் என்று இதர செலவு கணக்குகள் கேரள கருவூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.