வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:58 IST)

பாஜக தோற்றால் உத்தரப்பிரதேசம் கேரளா போல ஆகும் என்று பேசிய யோகி ஆதித்யநாத்: பினராயின் பதில் என்ன?

(இன்று 11.02.2022 வெள்ளிக்கிழமையன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

உத்தர பிரதேசத் தேர்தலில் வாக்காளர்கள் தவறு செய்தால் ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் அல்லது கேரளா போல .பி மாற அதிக கால எடுக்காது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் எதிர்வினையாற்றியுள்ளதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, , "மாநிலங்களின் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் ஆன்மாவாக உள்ள மக்களையும், அவர்களின் கலாச்சாரங்களையும், மொழிகளையும் மற்றும் அவற்றின் பன்முகத்தன்மையையும் 'அவமதிக்கக்கூடாது' என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உ.பி. கேரளாவாக மாறினால், அங்கே சிறந்த கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் கிடைப்பது மட்டுமல்லாமல், 'மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத' சமூகத்தை கொண்டதாகவும் உத்தரப்பிரதேசம் இருக்கும்.", என்று பதிலடி கொடுத்துள்ளார் என்கிறது தி ஹிந்து செய்தி.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கிய 94 வயது, பெண் சமூக ஆர்வலர்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையின் பெசன்ட் நகர் மற்றும் அடையாறு பகுதிகளை உள்ளடக்கிய வார்டு 174-இல் சுயேட்சை வேட்பாளராக 94 வயதான சமூக ஆர்வலர் காமாட்சி சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களின் உரிமைகளுக்காக பெசன்ட் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நிலவும் பொது பிரச்சனைகளுக்காக அவர் மேற்கொண்ட நீண்ட காலப் போராட்டத்தின் அடுத்த கட்டமே அவரது இந்த முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமாட்சி பாட்டி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், ஒரு தீவிரமான சமூக ஆர்வலர். இவரது இடைவிடாத போராட்டம் எலியட் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் நினைவகத்தை மீட்டெடுக்க வழிவகுத்தது. இவர் ஸ்பார்க் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இது அப்பகுதியில் உள்ள பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான ஒரு மன்றம்.

இந்த தேர்தலில் தான் வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காகவும், பொதுநல உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயல்படப்போவதாக அவர் கூறுகிறார் என்கிறது அந்த செய்தி.

கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு பணி இன்று தொடக்கம்

கீழடியில் இன்று 8 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்படுகிறது என்றும், இந்த பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் எனவும் 'தினந்தந்தி' செய்தி தெரிவிக்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்தன.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்தன. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார்.