ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (19:35 IST)

பாம்பு கடித்தும் மருத்துவமனைக்கு அனுப்பாத ஆசிரியர்! பரிதாபமாக இறந்த மாணவி!

கேரளாவில் பாம்பு கடித்த மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வகுப்பறையிலேயே அமர வைத்ததால், மாணவி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 10 வயது சிறுமி ஷாஹ்லா ஷெர். வழக்கம் போல நேற்று வகுப்பறையில் ஷெரின் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எங்கிருந்தோ வகுப்பறைக்குள் புகுந்த விஷப்பாம்பு ஒன்று ஷாஹ்லாவை கடித்திருக்கிறது. உடனே மாணவி தனது ஆசிரியரிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதை கூறியுள்ளார்.

மாணவியின் காயத்தை கண்ட ஆசிரியர் அது பாம்பு கடித்ததால் வந்த காயமில்லை என கூறி மீண்டும் அவரை அமர வைத்துள்ளார். பிறகு பாம்பு கடித்த இடத்தில் நீல நிறமாக மாறுவதாக ஷாஹ்லாவின் தோழிகள் கூறிய பின்னரே இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கிறார் அந்த ஆசிரியர்.

ஆனால் தலைமை ஆசிரியரோ உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வகுப்புக்கு வெளியே அமர வைத்துவிட்டு ஷாஹ்லாவின் பெற்றோருக்கு போன் செய்து வர சொல்லியிருக்கிறார். சம்பவம் அறிந்து உடனடியாக புறப்பட்டு வந்த மாணவியின் தகப்பனார் உடனடியாக மருத்துவமனையில் தனது மகளை அனுமதித்துள்ளார்.

ஆனால் விஷம் உடல் முழுவதும் பரவி விட்டதாக கூறி கோழிக்கோடு மருத்துவக்கல்லூரிக்கு அவரை அழைத்து போக சொல்லியிருக்கிறார்கள். கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் மகள் இறப்புக்கு பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகளே காரணம் என ஷீலா ஷெரினின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.