மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். குடும்ப கொலை வழக்கு: ஒருவர் கைது
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் என்ற பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் பந்து பிரகாஷ் பால், அவருடைய மனைவி பியூட்டி மற்றும் இவர்களது மகன் அன்கன் ஆகிய மூவரும் கடந்த 8-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதில் பியூட்டி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது பெரும் சோகத்திற்குரிய செய்தி
இந்த நிலையில் இந்த கொலைகள் குறித்து மேற்குவங்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கட்டிடத் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேற்குவங்க போலீசார் கூறியதாவது:
ஆர். எஸ்.எஸ் தொண்டரும் ஆசிரியருமான பந்து பிரகாஷ் பால், இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆகவும் பணி யாற்றி வந்தார். அவர் மூலம் கட்டிட தொழிலாளி உத்பல் பெஹரா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்துள்ளார். இந்த பாலிசியின் ஓராண்டு பிரிமியம் ரூ.24,167 ஆகும். இதன்படி 2 ஆண்டுகளுக்கான பிரிமியம் தொகையை உத்பல் பெஹரா வழங்கியுள்ளதாகவும், ஆனால் இந்த தொகைக்குரிய பில்களை பந்து பிரகாஷ் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது
இதுகுறித்து கேட்க கடந்த 8-ம் தேதி காலை 10.30 மணிக்கு பந்து பிரகாஷ் பால் வீட்டுக்கு கட்டிட தொழிலாளி உத்பல் பெஹரா சென்றதாகவும், பில் குறித்து சரியான பதிலை பந்து பிரகாஷ் கூறாததால் ஆத்திரமடைந்து அவரை வெட்டி கொலை செய்ததாகவும் தெரிகிறது.
இந்த கொலையை பார்த்துவிட்ட அவரது மனைவியையும் மகனையும் கொடூரமாக கொலை செய்த உதப்ல பெஹாரா பின்னர் தப்பியோடியுள்ளார். இந்த நிலையில் உத்பல் பெஹராவின் செல்போன் சிக்னலை வைத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த நிலையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் இதனையடுத்து அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.