புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (08:22 IST)

8 போலீஸாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி: உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடியை பிடிக்க சென்ற போலீஸ் படையினரை ரவுடி கும்பல் சுற்றி வளைத்து தாக்கியதில் 8 போலீஸார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நீண்ட ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் முக்கிய ரௌடி விகாஸ் துபே. இவன் மீது 50க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த 2001ம் ஆண்டில் உத்தர பிரதேச முக்கிய அரசியல் பிரமுகரான சந்தோஷ் சுக்லாவை காவல் நிலையத்திலேயே வெட்டி கொன்ற வழக்கும் இவன் மீது உள்ளது.

இவனை பிடிக்க பல ஆண்டுகளாக உத்தர பிரதேச போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து துணை எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய போலீஸ் படை விகாஸ் துபேவை பிடிக்க கிராமத்திற்குள் நுழைந்தது. நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்ரு கிராமத்தில் நுழைந்த போலீஸாரை விகாஸ் கும்பல் தாக்க தொடங்கியது. இதில் 8 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 6 பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு விகாஸ் கும்பல் தப்பியுள்ளது.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் ஆதித்யநாத் குற்றவாளிகளை பிடிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்