1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (08:30 IST)

செல்போன்கள் பறிமுதல்; கிராமத்திற்கு சீல்! – ரகசியம் காக்கும் போலீஸ்!

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தையே போலீஸார் சீல் வைத்து மூடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் உடலை பெற்றோரிடம் தராமல் காவலர்களே எரித்ததாக வெளியான செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பெண்ணின் உறவினர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டதும், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அங்கு பரபரப்பு எழுந்துள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உத்தர பிரதேசத்திற்குள் செல்ல முயன்றார். எல்லையில் காவலர்கள் தடுத்ததை மீறி அவர் செல்ல முயன்றபோது ஏற்பட்ட அமளியில் அவர் கீழே தள்ளவிடப்பட்டார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஹத்ராஸ் கிராமத்திற்கே சீல் வைத்துள்ள போலீஸ், ஹத்ராஸ் பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு இவ்வளவு ரகசியம் காப்பது ஏன் என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.