பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்ணுக்கு விபத்து! சதியா? தற்செயலா?

Last Modified திங்கள், 29 ஜூலை 2019 (08:35 IST)
உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் அவருடைய வழக்கறிஞரும் காயமடைந்துள்ளார். இது தற்செயலான விபத்தா? அல்லது சதியா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் என்பவர் தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை சுமத்திய அடுத்த நாளே அவருடைய தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தப் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர். அவருடன் சென்ற இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்று போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :