வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (13:37 IST)

டீசல் வாகனங்களுக்கு இனி 10% காற்று மாசு வரி! – மத்திய அரசு திடீர் முடிவு!?

இந்தியாவில் டீசல் வாகனங்களுக்கு இனி 10% காற்று மாசு உற்பத்தி வரி வசூலிக்க மத்திய போக்குவரத்து அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டுக்கு ஒரு கார், ஆளுக்கு ஒரு பைக் என வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் அல்லாமல் காற்று மாசுபாடும் அதிகரித்து வருகிறது. இது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட தீவிர விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பது, மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது மத்திய அரசு. எனினும் டீசல் வாகன பயன்பாடும் தொடர்ந்து இருந்தே வருகிறது. வாகன தொழிற்சாலைகள் மின்சார வாகனங்களை விட டீசல் வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றன.



இந்நிலையில்தான் டீசல் வாகனங்களுக்கு இனி மாசு உற்பத்தி வரியாக கூடுதலாக 10% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “சீக்கிரம் டீசல் வாகனங்களுக்கு குட் பை சொல்லுங்கள். இல்லையெனில் வரியை இன்னும் அதிகரிப்போம். பிறகு வாகன விற்பனை உங்களுக்கு கடினமானதாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.

டீசல் வாகன பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் மட்டுமே காற்று மாசுபாடு, காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்பதால் இந்த கடும் வரி விதிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வாகன அதிகரிப்பால் சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் சிக்கலில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டிற்கு நிச்சயம் உதவும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K