நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!
நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரமில்லை என்றும் நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த நீட் நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மதிப்பெண்ணை ரத்துசெய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வரும் 8-ந்தேதி இந்த வழக்கின் விரிவான விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நடந்து முடிந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரமில்லை என்றும் நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது.
நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையை சட்டம் அளிக்கும் என்றும் தேர்வுகளை திறம்பட நடத்த, பரிந்துரைகளை அளிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.