விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருள்? தேடுதல் பணியில் ரஃபேல் விமானங்கள்!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் விமான நிலையத்தில் வானத்தில் மர்ம பொருள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த விமான நிலையத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்து சென்றதை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பார்த்துள்ளனர்.
வெள்ளை நிறத்தில் இருந்த அந்த மர்ம பொருள் பிற்பகல் சமயத்தில் விமான நிலைய கட்டிடத்திற்கு முன்பு தோன்றியுள்ளது. பின்பு அங்கிருந்து மெல்ல நகர்ந்து விமான கட்டுப்பாட்டு கோபுரத்தை தாண்டி விமான ஓடுதளத்திற்கு மேலேயும் பறந்துள்ளது. சுமார் 4 மணி வரை தென்பட்ட அந்த மர்ம பொருளை விமான கட்டுப்பாட்டகமும் கவனித்த நிலையில் இதனால் விமான போக்குவரத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு ரஃபேல் விமானங்கள் உடனே இம்பால் விமான நிலையம் நோக்கி சென்றுள்ளன. மிகவும் தாழ்வாக பறந்து சோதனை மேற்கொண்ட நிலையில் ரஃபேல் விமானங்களின் தேடுதலில் எந்த மர்ம பொருளும் காணப்படவில்லை. அதன்பின்னர் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டுள்ளன.
எனினும் பதிவான கேமரா காட்சிகளை கொண்டு அந்த மர்ம பொருள் குறித்து விவரங்களை கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் ராணுவ பகுதியில் இவ்வாறாக தோன்றிய மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன் அது சீனாவின் உளவு பலூன் என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K