1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (19:24 IST)

பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்! – உத்தவ் தாக்கரே பேச்சு!

மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த சிவசேனா அதற்காக வெட்கப்படுவதாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றப் போதும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பேசிக் கொண்டதுப்படி ஆட்சியில் சமபங்கு தர வேண்டும் என சிவசேனா விடாப்பிடியாய் இருக்கிறது. ஆனால் பாஜகவோ அப்படி எந்த வாக்குறுதியும் தாங்கள் தரவில்லையென கூறுகிறது.

இந்நிலையில் மும்பையில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே “பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு வெட்கப்படுகிறேன். வாக்களித்தப்படி ஆட்சியில் சமப்பங்கு தராமல் என்னை பொய் கூறுவதாக சொல்கிறார்கள். இனிக்க இனிக்க பேசி ஏமாற்ற பார்க்கிறார்கள். இனியும் அமித்ஷாவையும் அவரது சகாக்களையும் நான் நம்புவதாக இல்லை” என்று பேசியுள்ளார்.

இதனால் பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சிவசேனா விட்டுக்கொடுப்பதாக இல்லை. சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரே அவர் வாழ்ந்த காலத்திலேயே சிவசேனா கட்சி மகாராஷ்டிராவை ஆள்வதை பார்க்க விரும்பினார். அவருக்கு அவர் மகன் உத்தவ் தாக்கரே ஒருநாள் சிவசேனா கண்டிப்பாக மராட்டியத்தை ஆளும் என வாக்கு கொடுத்திருந்தார். இதை ஒரு பேட்டியில் உத்தவ் தாக்கரேவே சொல்லியிருக்கிறார். தந்தைக்கு தந்த வாக்கை காப்பாற்ற உத்தவ் தாக்கரே விடாப்பிடியாய் இருப்பதாக கூறப்படுகிறது.