ஆட்சியை கவிழ்க்க முடியாததால் குழம்பிட்டாங்க! – பாஜகவை பங்கம் செய்த உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க முடியாத குழப்பத்தில் பாஜக தலைவர்கள் ஏதேதோ பேசி வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலின் விளைவாக மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவானது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா மகாராஷ்டிராவில் கூட்டணியற்ற பாஜக பெரும்பான்மை ஆட்சி அமைய வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் கூறும்போது மக்கள் நலனை காக்க சிவசேனாவுடன் பாஜக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என கூறியுள்ளார்.
பாஜக தலைவர்களே இவ்வாறாக ஆளுக்கொரு கருத்தை பேசியுள்ளது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் சிவசேனா விமர்சித்துள்ளது. அதில் “மகாராஷ்டிராவில் உங்கள் அரசியல் விளையாட்டை விளையாட முடியாது. ஜே.பி.நட்டா பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என கூறி வரும் நிலையில், ஆனால் சந்திரகாந்த் கூட்டணி அமைக்க தயார் என கூறுகிறார்.
பாஜக தலைவர்களுக்கு சிவசேனாவுடன் உடன்பாடு இல்லாத நிலையில் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? மக்களுக்காக செயல்படும் மகா விகாஸ் அகாடி கூட்டணியை கலைக்க முடியாத குழப்பத்தில் பாஜகவினர் ஏதேதோ பேசி வருகின்றனர்” என கூறியுள்ளார்.