வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் முரணாக உள்ளது.! கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு கார்கே கடிதம்..!
தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் முரணாக உள்ளது என்று கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2024 மக்களவை தேர்தல் ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” எனக் குறிப்பிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் முரண்பாடுகள் இருக்கின்றன. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான நம்பகத் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுகின்றன.
2024 மக்களவை தேர்தல் ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம். எனது 52 ஆண்டுகால தேர்தல் வாழ்வில், இறுதி நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததை நான் பார்த்ததில்லை.
எங்கள் ஒரே நோக்கம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதே. இத்தகைய முரண்பாடுகளுக்கு எதிராக நாம் கூட்டாகவும், ஒற்றுமையாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் குரல் எழுப்ப வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியும் பாஜகவும் முதல் இரண்டு கட்ட தேர்தலிலேயே படபடப்பும் விரக்தியும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வோம்” எனத் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.