ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 2 மே 2024 (15:41 IST)

வெயிலை விட பாஜகவின் கொள்கைதான் மக்களை சுட்டெரிக்கிறது..! மோடிக்கு கார்கே கடிதம்..!!

Karka
வெயிலை விட பாஜகவின் கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது என்று  பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
 
பிரதமர் மோடி அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காங்கிரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை மோடி கூறியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். 
 
அதில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை, தெளிவானவை என்றும் நாங்கள் அதை அவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் கொள்கைகளால் இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாஜக ஆட்சியில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது, ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் உரிமையைப் நிலைநிறுத்துவது என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பாஜக தொண்டர்களுக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதத்தில் நிறைய பொய்கள் இருந்தன என்றும் பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே சமரசக் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான் என அவர் விமர்சித்துள்ளார். இந்தியாவுக்கான சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 54.76% அதிகரித்து 2023-24ல் 101 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 
முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் நீங்கள் எதிர்ப்பார்த்த வாக்குகள் கிடைக்காததால் கவலையில் இருக்கிறீர்கள் என்றும் வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை சுட்டெரித்துள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.