1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:12 IST)

சட்டப்பேரவையை முற்றுகையிட்ட நரிக்குறவ மக்கள்.! போலீசார் அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு..!!

porattam
முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க அனுமதி மறுத்ததால் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு அதன் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களை போலீசார் அப்புறப்படுத்திய போது  கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
 
புதுச்சேரி மன்னாடிபட்டு கொம்யூன் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் கடந்த 25 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் புதுச்சேரி அரசு  இலவச மனை பட்டா வழங்கப்பட வேண்டும் என கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து மாநில அரசை வலியுறுத்தி பல்வேறு மனுக்களை அளித்துள்ளனர்.
 
இந்நிலையில்  தற்போது ஆளும் பாஜக, என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்ற உடன் முதலமைச்சர் ரங்கசாமியை நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் நேரில் சந்தித்தும் மனு அளித்திருந்தனர் 
 
ஆனாலும் தற்போதைய அரசு மனை பட்டா சம்பந்தமாக எந்தவித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனை அறிந்த  முதலமைச்சர் ரங்கசாமி,   நரிக்குறவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இலவச மனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்தார்.   ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் மனைபட்டா வழங்கப்படாததால் நரிக்குறவர்கள் 50க்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை சந்திக்க சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தனர்.
 
mutrugai
அவர்கள் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என சட்டப்பேரவை காவலர்களிடம் தெரிவித்தனர் ஆனால்  காவலர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் முதலமைச்சரை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரிய கடை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்பொழுது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதனால் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சட்டப்பேரவை காவலர்கள் நரிக்குறவர்கள் பிரதிநிதிகள் மூன்று பேரை முதலமைச்சரை சந்திக்க உள்ளே அனுமதி அளிப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு நரிக்குறவர்கள் கலைந்து சென்றனர்