தீ விபத்தில் சிக்கிய பலரை காப்பாற்றிய சிறுவன்..! கடவுள் ரூபத்தில் வந்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்.!
தெலங்கானாவில் மூலிகை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நந்திகம மண்டலத்தில், ஆலன் என்ற மூலிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நேரம், அந்த கட்டிடத்திற்குள் 50 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, நிறுவனத்தின் கட்டிடத்திற்குள் தீ வேகமாகப் பரவியதைக் கவனித்த நந்திகமவைச் சேர்ந்த சாய் சரண் என்ற சிறுவன், வேகமாக கட்டிடத்தின் மீது ஏறி, ஜன்னலில் தான் கொண்டு வந்த கயிற்றைக் கட்டியுள்ளார். பின்னர், கயிற்றின் உதவியுடன் சில தொழிலாளர்களைக் கீழே இறக்கி, அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, கட்டிடத்தின் மேல் தளத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் ஏணி வழியாக பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணிக்கு முன்னதாக நெருப்பிற்கு பயந்து ஜன்னலில் இருந்து ஒரு தொழிலாளி கீழே குதித்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஷம்ஷாபாத் டிசிபி நாராயண ரெட்டி, விபத்து குறித்து ஆய்வு செய்தார். பின்னர், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், சொத்து சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.