தமிழர் மனம் குளிர... தமிழில் பதவியேற்ற எம்.பிக்கள் !
இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளைப் பெற்று மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் நேற்று 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று பாராளுமன்றத்தில் தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் எம்பியாக பதவியேற்றார். அதன்பின் ராஜ்நாத் சிங் , கட்காரி ஆகியோர் பதவியேற்றனர்.
இதையடுத்து ஸ்மிருதி இராணி,சதானந்த கவுடா, உள்ளிட்ட எம்பிக்களும் பதவியேற்றனர். அதன் பின் தொடர்ச்சியாக பல்வேறு மாநில எம்பிக்கள் பதவியேற்றனர்.
இதன் பின்னர், தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். திமுக மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்ளும் போது, இறுதியாக தமிழ் வாழ்க என்று குரல் குரல் எழுப்பினர்.
அதனையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி தமிழில் பதவியேற்கும் போது, இறுதியாக வாழ்கதமிழ், வாழ்க பெரியார் என்று கூறினார்.இதற்கு மாறாக பாஜக எம்பிக்கள் ஜெய்ஸ்ரீராம் என்றனர்.