வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (13:54 IST)

பள்ளியை புறக்கணித்த மாணவிகள்:ஆசிரியர்கள் இல்லாததால் கொந்தளிப்பு

காரிமங்கலம் அருகே அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியாம்பட்டியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப்பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவிகள் படிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இது குறித்து மாணவிகள் பலமுறை தலைமை ஆசிரியர்களிடமும் நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர், இன்று காலை கையில் பதாகைகளுடன் பெரியாம்பட்டி-தருமபுரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், வட்டாச்சியார் கேசவமூர்த்தி, பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் அதிகாரிகள், உங்கள் பள்ளிக்கு காலி பணியிடங்கள் உள்ள ஆசிரியர்களை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதன் பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பள்ளிக்கு சென்றனர்.

மாணவிகளின் இந்த சாலை மறியலால் பெரியம்பட்டி-தருமபுரி சாலையில்  சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.