ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!
சென்னை துறைமுகம் அருகே கடலோர காவல் படை வீரரை அழைத்துச் செல்ல வந்த தனியார் டிராவல்ஸ் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கடலுக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காரின் கதவைத் திறந்து கடலோர காவல் படை வீரர் தப்பிய நிலையில், கடலில் மூழ்கிய கார் டிரைவரை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல் படை வீரரை அழைத்துச் செல்ல தனியார் டிராவல்ஸ் கார் வந்தது. அந்தக் காரை கொடுங்கையூரை சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், அவர் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் விழுந்தது. அந்தச் சமயத்தில், காரின் கதவைத் திறந்து கடலோர காவல் படை வீரர் தப்பினாலும், கார் ஓட்டுநர் மூழ்கிய காரில் சிக்கிக் கொண்டார்.
இதனை அடுத்து, 30-க்கும் மேற்பட்ட காவல் படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கார் ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை காரையும் ஓட்டுநரையும் மீட்கவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காரின் கதவைத் திறந்து தப்பிய கடலோர காவல் படை வீரர் மயங்கி விழுந்ததாகவும், அவரை சக வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva