முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற நீதிபதிகள், 5 மாணவர்களுக்காக 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
தேர்வு மையங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி தான் அறிவிக்கப்படுகிறது என்பதால் மையங்களுக்கு விரைவில் செல்ல முடியாத நிலை உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக சர்ச்சையை எழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 11-ம்தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva