மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன்.. சாட்சியங்களை கலைக்கக்கூடாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!!
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து. அதே ஆண்டு மார்ச் 9 ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் உள்ளார்.
இந்த வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணிஷ் சிசோடியா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 6-ம் தேதி நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உத்தரவாதத் தொகையாக ரூ. 10 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அவர் தனது பாஸ்போர்ட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சாட்சியங்களை கலைக்கக்கூடாது என்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர். இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.