எதற்கு எவ்வளவு அபராதம்? நீங்களே முடிவு செஞ்சு சொல்லுங்க!? – எஸ்கேப் ஆன போக்குவரத்து துறை அமைச்சர்

nithin gatkari
Prasanth Karthick| Last Modified புதன், 11 செப்டம்பர் 2019 (16:01 IST)
நாடெங்கும் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு அபராதம் வசூலித்து வரும் நிலையில் அபாரத தொகை குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் அதிகமாகி வருவதால் அவற்றை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை அதிகரித்தது. குறைந்த பட்சம் 1000 முதல் அதிகபட்சம் 10000 வரை அபராதமாக விதிக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்த இந்த புதிய சட்டத்தால் பல்வேறு இடங்களில் பிரச்சினைகள் எழுந்தன. சராசரி மக்களுக்கு 25,000 முதல் 1 லட்சம் வரை பல இடங்களில் அபராதங்கள் விதிக்கப்பட்டன.

மும்பையில் சிக்னலை மீறி வந்த இளைஞர் ஒருவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்ததால் அவர் நடுரோட்டிலேயே தனது பைக்கை கொளுத்தினார். அதுபோல காவலர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் சதாரண மக்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை விட இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது காவலர்களிடையே கிலியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அதிகமாக அபராதம் வசூலித்து வருவதற்கு மக்கள் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் தரும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி “போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவே அபராத தொகை அதிகரிக்கப்பட்டது. அது அதிகமாய் இருக்கும் பட்சத்தில் அதை குறைப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

சட்டத்தை நிறைவேற்றும்போது எந்த மாநில அரசையும் கலந்து கொள்ளாமல் செய்த அரசு, அபராத குறைப்புக்கு மட்டும் மாநில அரசை கேட்டுக்கொள்ளுங்கள் என்று கைக்காட்டிவிட்டு தப்புவது எப்படி சரியாகும் என கண்டன குரல்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து ஒலித்து வரும் கண்டன குரல்களால் கூடிய விரைவில் மாநில அரசுகளோ, மத்திய அரசோ அபராத தொகையை குறைக்கும் தீர்மானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :