1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2023 (12:23 IST)

ஆஸ்திரேலிய விசாவுக்காக அண்ணனை திருமணம் செய்த தங்கை?! – சோதனையில் அம்பலம்!

ஆஸ்திரேலியாவில் விசா கிடைப்பதற்காக சகோதர, சகோதரியான இருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு செல்வதை கனவாக கொண்ட பலர் வெளிநாட்டு பெண்களை/ஆண்களை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு குடியுரிமையை பெறுவது சமீப காலங்களில் சகஜமாகியுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலிய குடியேற்ற விசாவை பெற மத்திய பிரதேசத்தை சேந்த சகோதரன், சகோதரி செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் விசா பெற்று பணியாற்றி வந்துள்ளார்.


ஆஸ்திரேலிய குடியேற்ற சட்டங்களை பொறுத்தவரை தம்பதிகளில் ஒருவர் ஆஸ்திரேலிய விசா பெற்றிருந்தால் மற்றொருவருக்கு விசா எளிதில் கிடைக்கும். இதனால் தங்கையை ஆஸ்திரேலியா அழைத்து செல்ல திட்டமிட்ட சகோதரன் அவரை பஞ்சாப் மாநிலம் குருத்வாராவில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதை முறையாக அங்கு பதிவு செய்து திருமண சான்றிதழை பெற்றுள்ளனர். அதை வைத்து ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர். சமீபத்தில் அவர்களது ஆவணங்களை பரிசோதித்ததில் இருவரும் சகோதர, சகோதரி என்பது தெரிய வந்துள்ளது. இரு நாட்டு அரசுகளையும் ஏமாற்றி நாட்டிற்குள் நுழைந்தது குறித்து அவர்களிடம் விசாரிக்க தேடியபோது அவர்கள் ஆஸ்திரேலியாவில் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் தேடப்பட்டு வரும் நிலையில் விசா பெறுவதற்காக அவர்கள் செய்த செயல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K