போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை! – முதலமைச்சர் அறிவிப்பு!
டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்ற மசோதா இயற்றியபோது ஏராளமான விவசாயிகள் டெல்லியில் மாதக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சட்டம் கைவிடப்பட்ட நிலையில் விவசாயிகள் மேல் பதியப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை திரும்ப பெறுதல், உணவுப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது மீண்டும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு வருகின்றனர்.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாத படி கம்பி வேலிகள், முள் கம்பிகளை அமைத்து போலீஸ் மற்றும் ராணுவம் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல், தடியடி தாக்குதலும் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த களேபரத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயி சுப்கரண் சிங் பலியானார்.
இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் பகவந்த் மான் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சுப்கரண் சிங்கின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Edit by Prasanth.K