வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (12:28 IST)

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

ragul gandhi
எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடந்து முடிந்த தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதியான அமேதி தொகுதியிலும், வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில், வயநாட்டில் மட்டுமே வெற்றிபெற்றார்.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு தொகுதி எம்.பி-யாக இருந்தார் ராகுல் காந்தி. இந்த தேர்தலில் அவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், நேரு குடும்பத்துக்கு நெருக்கமான ரேபரேலி தொகுதியில் எம்.பி-யாக நீடிப்பாரா, அல்லது கடந்த முறை கைகொடுத்த வயநாட்டில் எம்.பி-யாக நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே கடந்த 12-ம் தேதி வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, எந்த தொகுதியில் எம்.பி-யாக நீடிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், ராகுல் காந்தி வயநாட்டை விட்டு செல்வது வருத்தமாக உள்ளது என கூறியிருந்தார். எனவே ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு அதிகம் என தெரிய வந்துள்ளது. 


இந்நிலையில் தேர்தல் முடிவு அறிவித்த 14 நாட்களிள் இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வது பற்றி அறிவிக்க வேண்டும். அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.