1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:29 IST)

600க்கும் அதிகமான போலி லோன் செயலிகள்! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

இந்தியாவில் மொபைல் செயலிகள் மூலமாக லோன் வழங்குவதாக சுமார் 600க்கும் மேற்பட்ட போலி லோன் செயலிகள் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக இந்தியாவில் லோன் வழங்கும் செயலிகளின் பயன்பாடு மற்றும் அதன் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன. எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக லோன் வழங்கும் செயலிகள் பின்னர் முழுதாக லோன் பணத்தை கட்டினாலும் கூட மேலும் பணம் கட்ட சொல்லி கட்டாயப்படுத்துவதும், கடன் வாங்கியவரின் தொடர்பில் உள்ளவர்களுக்கு அவர் குறித்த தவறான செய்திகளை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த போலி லோன் கும்பலால் சில தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் இந்த லோன் செயலிகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் 600க்கும் அதிகமான சட்டவிரோத லோன் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. இவை மக்களை எளிய விதத்தில் ஏமாற்றும் வகையில் பல ஆப் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன. லோன் குறித்த வார்த்தைகளை இணையத்தில் தேடினால் ஆயிரத்திற்கும் அதிகமான செயலிகள் காட்டப்படுகிறது.

டிஜிட்டல் லெண்டிங் செயலிகள் குறித்து புகார் தெரிவிக்க தற்போது சாசெட் என்ற தனி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை முறையாக பதிவு செய்யாத அமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களால் தொடுக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.