1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (20:32 IST)

பாஜகவில் ரவீந்திர ஜடேஜா.! மனைவி பகிர்ந்த புகைப்படம்..!!

Ravindra Jadeja
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்த புகைப்படத்தை அவரது மனைவி ரிவாபா, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். 

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த போட்டியோடு  டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்தார்.

இந்நிலையில் ஜடேஜா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிவாபா உடன் பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்றாலும், மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் பாஜகவில் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அடையாள அட்டையை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நடத்திய சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்று கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.