1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (12:50 IST)

மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை.! மக்களவை தேர்தலில் போட்டி..!!

Tamilasai
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று பாஜகவில்  மீண்டும் இணைந்தார். பாஜகவில் மீண்டும் இணைந்தது மிக்க மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது பெரும் விவாத பொருளாக மாறியது.  நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை விளக்கம் அளித்தார்.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமாலயத்திற்கு வருகை புரிந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, அண்ணாமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தமிழிசை மீண்டும் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார். 
 
கஷ்டமான முடிவை நான் இஷ்டமாக எடுத்துள்ளேன் என்றும் ராஜ்பவனை விட்டு விட்டு  மக்களின் நலனுக்காக கமலாயத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அனைவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

 
அதிகாரத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் சேவையாற்ற தமிழிசை மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். அரசியல் அனுபவத்துடன் நிர்வாக அனுபவமும் பெற்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.