ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!
ஒரு ரயில் விபத்து நடந்தால் அந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீது விசாரணை நடத்தப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ரயில் ஓட்டுநர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறையை கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த யோசனை ஏன் ஆளுங்கட்சியை சேர்ந்த யாருக்கும் வரவில்லை என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று நாடு முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்
அப்போது ரயில் ஓட்டுநர்களின் முறை என்ன? அவர்களுடைய மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்று ராகுல் காந்தி கேட்டார். பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள் ஓய்வு கிடைப்பதில்லை என்றும் நீண்ட தூரம் ரயில்களை இயக்கும் போது வீடுகளை விட்டு வெகு தொலைவு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிக நேரம் ரயில்களை இயக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஓட்டுனருக்கு போதிய இடைவெளி கிடைப்பதில்லை என்றும் கூறினர்.
இதனை அடுத்து ரயில் ஓட்டுநர்களின் குறைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று ராகுல் காந்தி அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். ரயில் ஓட்டுனர் தங்களுக்கு வாரத்தில் 46 மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும், உதாரணமாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினால் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஓய்வு வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரயில் ஓட்டுநர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கு போதிய ஓய்வு மற்றும் இடைவெளி கொடுத்தால் மட்டுமே அவர்கள் கவனத்துடன் ரயில்களை இயக்க முடியும் என்றும், ஒரு ரயிலில் உள்ள நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் ரயில் ஓட்டுநர் கைகளில் இருப்பதால் அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ரயில்வே துறையின் கடமை என்றும் கூறப்பட்டு வருகிறது.
Edited by Mahendran