ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (17:28 IST)

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

Flight
கடந்த சில மாதங்களாக புதுச்சேரி விமான நிலையம் இயங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் புதுச்சேரியில் இருந்து சில முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதிக கட்டணம் காரணமாக பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், கடந்த பிப்ரவரி மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் புதுச்சேரியில் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து தனது விமானங்களை இயக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, 72 பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமான சேவை டிசம்பர் 20ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. காலை 10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் விமானம், பகல் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் 5.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு மீண்டும் பெங்களூர் சென்றடையும்

அதேபோல் புதுச்சேரியில் இருந்து 12.45 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். மறு மார்க்கமாக பிற்பகல் 3.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran