மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை "இந்தியாவுக்காகவே வாழ்ந்து, சுவாசிப்பவர்" என்றும், மிகவும் நம்பகமான மற்றும் நேர்மையான தலைவர் என்றும் புகழ்ந்துள்ளார்.
முன்னணி இதழுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், மோடியுடனான உறவு மிக நம்பகமான மற்றும் நட்பு ரீதியானது என்றும், இந்தியாவுக்கு அவர் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்றும் மனதார பாராட்டு தெரிவித்தார். பொருளாதாரம், பாதுகாப்பு, மனிதாபிமான ஈடுபாடு மற்றும் உயர் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்குமான உறவுகளை வலுப்படுத்த மோடி தீவிரமாக முயற்சி செய்கிறார் என்றும் புதின் குறிப்பிட்டார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்புறவை நினைவுகூர்ந்த புதின், மோடியின் முந்தைய மாஸ்கோ பயணத்தின்போது, தனது இல்லத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து, இரவு முழுவதும் தேநீர் அருந்தி, தூய்மையான மனிதர்களைப் போல பல்வேறு விஷயங்களைப் பற்றிச் சுவாரஸ்யமாக பேசியதை பகிர்ந்துகொண்டார். இது, இரு தலைவர்களுக்கும் இடையேயான ஆழமான தனிப்பட்ட பிணைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
முன்னதாக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக புதுடெல்லிக்கு வந்த புதினை, மோடி விமான நிலையத்திற்கே சென்று நெஞ்சார தழுவி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva