சக மாணவியை துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டு கொண்ட கல்லூரி மாணவன்.. சட்டக்கல்லூரியில் திகில் சம்பவம்..!
பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள மாய் பாகோ சட்டக் கல்லூரியில் இன்று ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சியில், மாணவர் ஒருவர் தனது சக மாணவியை சுட்டு கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டது பதிவாகியுள்ளது.
மல்லியன் கிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர் வகுப்பறைக்குள் நுழைந்து, நௌஷெரா பண்ணுவான் பகுதியை சேர்ந்த சந்தீப் கவுர் என்ற மாணவியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்த பிரின்ஸ், சந்தீப்பை மிக அருகிலிருந்து சுட்டார்.
இதில் சந்தீப் கவுர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டவுடன் வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் பீதியில் அலறியடித்து ஓடினர். கல்லூரி வளாகத்திற்குள் ஒரு மாணவர் துப்பாக்கியுடன் எப்படி நுழைய முடிந்தது என்று உயிரிழந்த மாணவியின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva