ஒரு இரவு தங்குவதற்கு ரூ.30 லட்சம்.. டெல்லியில் திடீரென நட்சத்திர விடுதிகளின் வாடகை உயர்ந்தது ஏன்?
அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெறவுள்ள "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" உலகளாவிய கவனத்தை பெற்றுள்ளது. பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக, டெல்லியிலுள்ள நட்சத்திர விடுதிகளின் வாடகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, தாஜ் பேலஸ் விடுதியில் ஒரு இரவிற்கான அறை வாடகை வரிகளுடன் சேர்த்து சுமார் ரூ.30 லட்சம் வரை எட்டியுள்ளது. சாதாரண நாட்களில் ரூ.1.5 லட்சமாக இருக்கும் அறைகளின் விலை, இந்த ஐந்து நாட்களில் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐடிசி மௌரியா மற்றும் அந்தாஸ் டெல்லி போன்ற விடுதிகளில் பெரும்பாலான அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் பெருநிறுவன தலைவர்களின் வருகையாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இம்மாநாடு டெல்லியை ஒரு உலகளாவிய வர்த்தக மையமாக முன்னிறுத்துவதுடன், விருந்தோம்பல் துறைக்கு மிகப்பெரிய வருவாயை தேடித்தந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த அதீத விலை உயர்வு டெல்லி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva