புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (08:45 IST)

கோட்சே விவகாரத்தில் மன்னிப்பு கேட்டார் பிரக்யாசிங்!

கமல் ஆரம்பித்து வைத்த கோட்சே என்ற நெருப்பு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்த நாதூராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பெண் சாமியாரும் பாஜக வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்கூர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 பிரக்யா சிங் தாக்கூரின் இந்த கருத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வலிறுத்தவே பாஜகவுக்கு இந்த விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை கொடுத்தது. இதனையடுத்து பாஜகவின் மேலிடத்தின் அறிவுரையின்படி தற்போது  பிரக்யா சிங் தாக்கூர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு தன் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், யாருடைய மனதையும் காயப்படுத்த தான் விரும்பவில்லை என்றும் அவ்வாறு தன்னுடைய பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு தான் மன்னிப்புக் கேட்டு கொள்வதாகவும், நாட்டிற்காக காந்திஜி செய்ததை யாரும் மறந்துவிட முடியாது என்றும் தன்னுடைய பேச்சை ஊடகங்கள் மிகைப்படுத்தி திரித்து திசை திருப்பி விட்டதாகவும் பிரக்யாசிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியபோது, 'கோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து, ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார். இந்த நிலையில் பிரக்யா சிங் தாகூர் கூறிய விவகாரம் குறித்து உடனடியாக அறிக்கை தர வேண்டும் என மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.