இந்தியாவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினர் … அதைப்பேச கமலுக்கு தைரியம் உண்டா ? – ஹெச் ராஜா கேள்வி !
நடிகர் கமல் இந்து தீவிரவாதம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹெச் ராஜா கமலுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
பள்ளப்பட்டியில் நேற்று நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று கூறினார்.
கமலின் இத்தகைய பேச்சுக்கு நாடு முழுவது எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன. இதையடுத்து கமல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன. கமலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா டிவிட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ‘திருநெல்வேலி மேலப்பாளையம் முஸ்லிம்கள் 1947 ஆகஸ்டு 14 அன்று பாக்கிஸ்தான் கொடியேற்றினர். சுதந்திர இந்தியாவின் முதல் தேசவிரோத செயல் அது என்று சொல்ல கமலுக்கு தைரியம் வருமா? அந்த முஸ்லிம்களும் அவர்கள் சந்ததியும் பாக்கிஸ்தானுக்கு போகவில்லை இங்குதான் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
ஆனால் ஹெச் ராஜா சொல்லும் குறிப்பிட்ட 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடையவில்லை. அதனால் அன்றைய தினத்தை சுதந்திர இந்தியா என சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.