போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு.. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்..!
போலி விளம்பரங்கள் வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் மற்றும் அதன் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகிய இருவருக்கும் கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இன்று ஆஜராக வேண்டிய நிலையில் அவர்கள் இருவரும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களாக உள்ளது என்றும், இது விதிகளை மீறியதாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும், அலோபதி மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் வெளியிட்டதாகவும், நோய்களை குணப்படுத்துவதற்கான ஆதாரம் அற்ற வாசகங்களை விளம்பரத்தில் வெளியிட்டதாகவும் கேரளா முழுவதும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கோழிக்கோடு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே, போலி விளம்பரம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கூறினார் என்பது தெரிந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தாலும், கேரளாவில் உள்ள வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் ஆஜர் ஆவதற்காக தான் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva