இன்று டிரம்ப் பதவியேற்பு விழா.. காஞ்சிபுரம் பட்டு சேலையில் வந்த நீடா அம்பானி..!
அமெரிக்கா அதிபராக இன்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில், சிறப்பு விருந்தினராக முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி கலந்து கொள்ள உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்க இருக்கும் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலையில் இருப்பதாக கூறப்படும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட், நேற்று இரவு தனது இல்லத்தில் விருந்தளித்த நிலையில், அந்த விருந்தில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி, நீடா அம்பானியிடம் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் டிரம்ப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்றைய நிகழ்விலும் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி கலந்து கொள்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலையில் அணிந்து வலம் வந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், இந்த விழாவில் அவர் காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவருடைய சேலையில் மயில், கோபுரங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்த நிலையில், தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவரால் இந்த சேலை வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னரும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலை தான் அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran