வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:13 IST)

பதஞ்சலி வழக்கு..! கைகூப்பி மன்னிப்புக் கேட்ட பாபா ராம்தேவ்...!!

Baba Ramdev
உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக பாபா ராம்தேவ் நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார்.

யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஆயுர்வேத துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் ’பதஞ்சலி’ தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது.
 
இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியது.
 
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். எனினும் பாபா ராம்தேவ் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பு வெறும் வாய்வார்த்தை என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையையும் தள்ளிவைத்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.   இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

 
இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது