காஷ்மீர் மக்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் வரும் – எச்சரிக்கை கொடுக்கிறதா பாகிஸ்தான்?
காஷ்மீருக்கு வழங்கபட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேகத்தில் அண்டை நாடுகளின் மறைமுக அச்சுறுத்தல்கள் வர தொடங்கிவிட்டன.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் முயற்சிக்கு நாட்டுக்கு உள்ளிருந்து, வெளியிலிருந்தும் பல எதிர்ப்புகள் வந்தபடி உள்ளன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இது இந்தியாவின் உள்விவகாரம் என இந்திய அரசு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.
லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக பிரிப்பது சீன – இந்திய எல்லையில் பிரச்சினைகளை கொண்டுவரும் என்று சீனா கூறியுள்ளது. இந்த பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இஸ்லமாபாத்தில் நடைபெற்ற கார்ப்ஸ் கமாண்டர் கூட்டத்தில் பேசிய தளபதி பஜ்வா ”காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய சலுகைகளை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. இந்த நேரத்தில் நாம் காஷ்மீருக்கு துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் பாகிஸ்தான் செய்யும். இந்தியாவின் செயல்பாட்டையும், முடிவுகளையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் காஷ்மீருக்கு உதவ முன்வருவது போல் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறதோ என்ற பதட்டநிலை உருவாகியுள்ளது.