புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (18:59 IST)

காஷ்மீர் குறித்து ஐ.நா.வுக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான்: அதில் இருப்பது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன்கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமை பறிக்கப்பட்டு, அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கும் பாஜக அரசின் மசோதாவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஷ்மீரில் வரலாறு காணாத முறையில் ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, தொலைத் தொடர்பும், இணையமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டு இந்த மாற்றங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்துவதற்கு சில தினங்களுக்கு முன்பே அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஏற்பட்டுவரும் நிலைமை குறித்து ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. தலையீட்டைக் கோரி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்டரசுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் மீறப்படுவதாக புகார் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் நடப்பதாக பாகிஸ்தான் கூறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய, ஐ.நா. ஒரு உண்மை அறியும் குழுவை நியமிக்கவேண்டும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு பிரதிநிதியை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.அந்தக் கடிதத்தின் முழுமையான தமிழ் வடிவம்:

அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள்

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்புடைய ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். அவை தெற்காசியாவின் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுப்பவையாகும்.

முதலாவதுஇந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வளர்ந்துவரும் மனித உரிமை சூழ்நிலையின் அளவும், காத்திரமும். மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் கடந்த ஆண்டு வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் மனித உரிமை மீறலின் தீவிரம் குறித்து சாட்சியமளித்திருந்தது. பொதுமக்கள் கொல்லப்படுவது, குறிப்பாக காவலில் கொல்லப்படுவது, கொத்துக் குண்டுகள் மூலம் குழந்தைகள் உள்ளிட்ட இளம் காஷ்மீரிகளின் பார்வையைப் பறிப்பது, வன்புணர்வு, கொடுமை, காணாமல் ஆக்குவது ஆகிய அரசு அடக்குமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த சமீபத்திய அறிக்கை விரிவாகவும், சுயேச்சையாகவும் ஆவணப்படுத்தியுள்ளது.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த திட்டமிட்ட,பேரளவு மனித உரிமை மீறல்களை அடக்குமுறைச் சட்டங்களின் மூலமாகவும், பாதுகாப்புப் படையினர் மத்தியில் நிலவும் தண்டனை பற்றிய அச்சமற்ற போக்கின் உதவியோடும், செயல்படுத்துகிறது இந்தியா. சர்ச்சைக்குரிய பகுதியாக ஐ.நா. பாதுகாப்புக் குழு அடையாளப்படுத்துகிற ஒரு பகுதியில், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் போன்ற ஒரு அமைப்பினால், சுயேச்சையாக ஆவணப்படுத்தப்பட்ட இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேசவேண்டிய பொறுப்பு ஐ.நா.வுக்கு உள்ளது.

இரண்டாவதாககட்டுப்பாட்டு எல்லைக் கோடு தாண்டி இந்தியா துப்பாக்கியால் சுடுவதும், குண்டுவீசுவதும் தற்போது அதிகரித்துவருகிறது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் 2003ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்தப் புரிந்துணர்வை மட்டும் மீறவில்லை, இதனால் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர், பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைகின்றன. தூண்டுதல் ஏதும் இல்லாமலேயே மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை சரி செய்யப்படாமல் தொடருமானால், இந்தப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்து, அதன்மூலம் பாதுகாப்பிலும், அமைதியிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எல்லை தாண்டி நடக்கும் தாக்குதல்களோடு, ஏற்கெனவே உலகில் மிக அதிகமாக ராணுவ மயமாக்கப்பட்ட பகுதியான இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 லட்சம் பாதுகாப்புப் படையினர் இருக்கும் நிலையில் இந்தியா மேலும் 10 ஆயிரமோ அல்லது கூடுதலாகவோ துணை ராணுவப் படையினரை தற்போது அனுப்பியுள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து கசிந்த தகவல்களின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாலை வழியாகவும், சிறப்பு விமானங்கள் மூலமும் 'இந்திய ஆக்கிரமிப்பு' காஷ்மீருக்கு வரும் கூடுதல் படையினர் வரும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. எந்த மூத்த இந்திய அதிகாரியும் இந்த ஊடகச் செய்திகளை மறுக்கவுமில்லை, நிலைமையை அமைதிப்படுத்தவுமில்லை என்பது இந்தச் செய்திகளுக்கு அதிக நம்பகத்தன்மை வழங்குகிறது.

ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சமாளிப்பதற்காக, ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிவைத்துக்கொள்வது என்ற இந்திய ரயில்வே அதிகாரிகளின் முடிவு, இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமாக இருப்பதைக் காட்டுகிறது. இந்த சம்பவங்களால், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களுக்கு இருக்கும் அச்சமும் பதற்றமும் மேலும் அதிகரிக்கிறது.

மூன்றாவதாககாஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35ஏ-வை ரத்து செய்யவும், அதைத் தொடர்ந்து உறுப்புரை 370ஐ ரத்து செய்யவும் தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகிறது இந்தியா என்ற கவலைகளை இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்வாசிகள் யார் என்பதையும், மாநிலக் குடியுரிமை மற்றும் சொத்துரிமை போன்றவற்றையும் உறுப்புரை 35ஏ வரையறை செய்கிறது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் குரேஷி.

கருத்தறியும் வாக்கெடுப்பு மூலமே இறுதித் தீர்வு

காஷ்மீர் தொடர்பான ஐ.நா. தீர்மானம் குறித்து அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட குரேஷி,
"ஐ.நா. மேற்பார்வையில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தும்போது அதன் முடிவுகளைப் பாதிக்கும் என்பதால், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள்தொகை தன்மையை மாற்றியமைக்கும் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எதிர்த்துவந்துள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுகிற செயல்களாகும். குறிப்பாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான பகுதியை இது மீறுகிறது. இந்தியாவின் இந்த பழைய சதித்திட்டம் குறித்து 27 ஏப்ரல் 2017 அன்று ஒரு கடிதம் மூலம் உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தது பாகிஸ்தான்.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும், தொடர்புடைய ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம், 'சுதந்திரமான, சார்பற்ற முறையில் ஐ.நா. மேற்பார்வையில் நடத்தப்படுகிற கருத்து வாக்கெடுப்பின் மூலம் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்பவே ஜம்மு காஷ்மீர் விவகாரம் இறுதியாகத் தீர்க்கப்படும்' என்கிறது" என்று குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

"பாதுகாப்புக் குழு பரிசீலனையில் இருக்கும்போது நிலைமையில் ஏற்படுகிற அல்லது ஏற்படுவதைப் போல தோன்றுகிற பொருண்மையான மாற்றங்கள் குறித்து பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். கவுன்சிலிடம் கலந்தாலோசிக்கவேண்டும்" என்று இந்தியாவையும், பாகிஸ்தானையும் கேட்டுக்கொள்கிறது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம் எண் 38. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடக்கும் நிலையில், இந்த தீர்மானத்தை ஐ.நா. கவனத்துக்குகொண்டுவர விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மனித உரிமை சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. எனவே உடனடியாக ஐ.நா. மோசமான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, மனித உரிமை மீறல்களை நிறுத்தும்படி, தூண்டல் இல்லாமல் எல்லை தாண்டி சுடுவதை நிறுத்தும்படி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நிறுத்துவதற்கும் இந்தியாவை வலியுறுத்தவேண்டும்.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று கள நிலவரத்தை ஆராய்வதற்கு ஐ.நா. ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்கவேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். அத்துடன், மனித உரிமைக்கான உயர் ஆணையர் பரிந்துரைத்தபடி பாரிய மனித உரிமை மீறல்களைப் பற்றி புலனாய்வு செய்வதற்கு விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும். அத்துடன் நடப்பு நிகழ்வுகளால் இந்த பிராந்தியத்தில் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்கு ஜம்மு காஷ்மீருக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன் " என்ற கோரிக்கைகளோடு இந்தக் கடிதம் முடிகிறது.